தேசிய பள்ளி கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை


தேசிய பள்ளி கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 8 Nov 2020 10:57 AM GMT (Updated: 8 Nov 2020 10:57 AM GMT)

தேசிய பள்ளி கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் தஞ்சை மாவட்டத்திலிருந்து கலந்துகொண்டு பரிசுகளை வென்ற 9 மாணவ,மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன், முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி மற்றும் ஹாக்கி பயிற்றுனர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் வரவேற்றார்.

வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்

விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி மாணவ, மாணவிகளை பாராட்டினார். விழாவில் 2018-19 ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ் நாட்டின் சார்பாக கலந்து கொண்டு பதக்கம் பெற்ற 9 பேருக்கு முதல்-அமைச்சரின் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் அஜீத்குமார், பாலாஜி (கைப்பந்து), தனுஸ்ரீ (இறகுப்பந்து), ஸ்வேதா (கடற்கரை கையுந்துபந்து), சிவதர்ஷினி (சிலம்பம்) ஆகியோர் முதல்பரிசு (தங்கப்பதக்கம்) பெற்றதையடுத்து தலா ரூ.2 லட்சமும், கவியரசு (இறகுப்பந்து), தரணி (வலைப்பந்து) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றதையடுத்து தலா ரூ.1½ லட்சமும், அகிலாண்டேஸ்வரி, சினேகா (சிலம்பம்) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றதையடுத்து தலா ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.

பெருமை சேர்க்க வேண்டும்

மேலும் வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில், “மாணவ மாணவிகள் கல்வியோடு உடற்கல்வியும் கற்றுக்கொண்டு தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று பல பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்”என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால், கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை வர இருப்பதையொட்டி, பொது மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடித்து விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. அப்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். 7 பேர் விடுதலை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் சரவணன், மொத்த கூட்டுறவு பண்டக சாலை துணைத்தலைவர் ரமேஷ், தஞ்சை வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சாமிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story