ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது துரைமுருகன் பேட்டி


ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2020 6:28 PM IST (Updated: 8 Nov 2020 6:28 PM IST)
t-max-icont-min-icon

‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது’ என்று வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர், 

தி.மு.க. சார்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த பொதுக்கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கதிர்ஆனந்த் எம்.பி., அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விஜய், ஞானசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

குடிமராமத்து திட்டத்தில் கொள்ளை

கூட்டத்துக்கு பின்னர் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் முறையாக செய்யப்படவில்லை. மாவட்டம் வாரியாக குளம், ஏரி, ஆறு தூர்வாரும் பணி நடைபெறும் பட்டியலை தர வேண்டும் என்று சட்டசபையில் 4 முறை நான் கேட்டேன். அந்த பட்டியலை தருகிறேன்... தருகிறேன்... என்று பலமுறை சொன்னார்கள். ஆனால் இதுவரை பட்டியலை தரவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு கூட தெரியாமல் எங்கள் தொகுதியில் சில ஏரிகளை தூர்வாரி விட்டதாக கணக்கு காட்டி உள்ளார்கள். குடிமராமத்து திட்டத்தில் எந்த ஆறு, குளம், ஏரிகளை தூர்வாரினார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் கொள்ளையடித்து விட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி புரிந்து வருகிறது. அவர்களுக்கு கை கட்டுகிற ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. எனவே எங்களுக்கு என்ன பயம் என்ற தைரியத்தில் பா.ஜ.க.வினர் வேல் யாத்திரை நடத்துவோம் என்று கூறி வருகிறார்கள்.

3-வது அணி அமைக்க தகுதி உள்ளது என்று ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவருடைய எண்ணம், நம்பிக்கை, தைரியம்.

7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் காலதாமதம் செய்து வருகிறார். இதற்காக தான் நாங்கள் முன்பே ‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை. நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை’ என்று கூறினோம். தி.மு.க. சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story