14-ந் தேதி 2 மணி நேரம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி 5 நாள் தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை
5 நாள் தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும் 14-ந் தேதி 2 மணி நேரம் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 5 நாட்கள் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
பட்டாசுக்கு தடை
தீபாவளியையொட்டி ஏற்படும் காற்று மாசு மற்றும் அதனால் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்து உள்ளது.
மராட்டியத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படாவிட்டாலும், மாநில தலைநகர் மும்பையில் அதற்கு தடை விதித்து மாநகராட்சி நேற்று உத்தரவிட்டது.
இது தொடர்பாக மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2-வது அலையை தவிர்க்க...
மும்பையில் கொரோனா பரவலின் 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகள் மூச்சு விட சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைகிறது. பட்டாசு புகை மாசு காரணமாக மேலும் அவர்கள் பாதிப்புக்கு ஆளாகுவார்கள். கொரோனா நோயாளிகள் சந்திக்கும் இந்த பிரச்சினைகளை தவிர்க்க பட்டாசு வெடிப்பதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.
மாநகராட்சி உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இதர விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சியின் 24 வார்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தீப விளக்குகளை ஏற்றி தீபாவளியை கொண்டாடுமாறு மக்களை மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.
14-ந் தேதி அனுமதி
அதேவேளையில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) லட்சுமி பூஜை தினத்தன்று மட்டும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதில் மத்தாப்பூ, புஸ்வானம், சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை மட்டும் பொதுமக்கள் வெடிக்க வேண்டும். சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தீபாவளி பண்டிகையின் போது ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ஜிம்கானாக்கள் போன்ற பகுதிகளில் வானவேடிக்கை நிகழ்த்தவும் தடை விதிக்கப்படுகிறது.
சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்
பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாட வேண்டும். தீப விளக்குகளை ஏற்றும்போதும், பட்டாசு வெடிக்கும் போதும் எளிதில் பற்றி எரியும் சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கேட்டுக்கொண்டதன் பேரில் மும்பை மாநகராட்சி தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story