2 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டி.வி. சேனல் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு


2 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டி.வி. சேனல் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 9 Nov 2020 7:16 PM GMT (Updated: 9 Nov 2020 7:16 PM GMT)

2 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டி.வி. சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை, 

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால், இந்த இரட்டை தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில், கடந்த புதன்கிழமை அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அலிபாக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஜாமீன் வழங்க மறுப்பு

இந்தநிலையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். மாநில அரசு மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக செய்தி ஒளிபரப்பியதால் தான் குறிவைக்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் மனுவில் அர்னாப் கோஸ்வாமி கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது.

அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் தாங்கள் ஏற்கனவே கூறியபடி மனுதாரர்கள் வழக்கமான ஜாமீனுக்காக செசன்ஸ் கோர்ட்டை அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து விட்டதால், அது கீழ்கோர்ட்டு உத்தரவை பாதிக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் நேற்று அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

மந்திரியிடம் பேசிய கவர்னர்

இந்தநிலையில் அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்து நேற்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, சிறையில் அர்னாப் கோஸ்வாமியை அவரது குடும்பத்தினர் பார்த்து பேச அனுமதிக்குமாறு அனில் தேஷ்முக்கை கவர்னர் கேட்டுக்கொண்டார். 

Next Story