கர்நாடகத்தில் கன்னடர்களும், தமிழர்களும் அண்ணன்-தம்பி போல் வாழ்கிறார்கள் ராஜ்யோத்சவா விழாவில் எஸ்.டி.குமார் பேச்சு


கர்நாடகத்தில் கன்னடர்களும், தமிழர்களும் அண்ணன்-தம்பி போல் வாழ்கிறார்கள் ராஜ்யோத்சவா விழாவில் எஸ்.டி.குமார் பேச்சு
x
தினத்தந்தி 10 Nov 2020 1:50 AM IST (Updated: 10 Nov 2020 1:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கன்னடர்களும், தமிழர்களும் அண்ணன்-தம்பி போல் வாழ்கிறார்கள் என்று கன்னட ராஜ்யோத்சவா விழாவில் எஸ்.டி.குமார் பேசினார்.

பெங்களூரு, 

பெங்களூரு கம்மனஹள்ளி குள்ளப்பா சர்க்கிளில் கன்னட அமைப்புகள் சார்பில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கர்நாடக மாநில அ.தி.மு.க. இணை செயலாளர் எஸ்.டி.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் வாட்டாள் நாகராஜ் பேசுகையில், எஸ்.டி.குமாரை எனக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க.வினர் இந்த மண்ணோடு ஒன்றி வாழ்கின்றனர். எனக்கும், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நல்ல நட்புணர்வு இருந்தது. நான் மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட போது, கோலார் தங்கவயல் எம்.எல்.ஏ. பக்தவச்சலத்தை எனக்கு ஆதரவாக ஓட்டளிக்க செய்து எனக்கு ஆதரவு கொடுத்தார். நான் ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்த காலத்தில் இருந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளேன். கன்னட மொழியை கர்நாடகத்தில் வாழும் அனைவரும் ஏற்றுக்கொண்டு கற்க வேண்டும் என்றார்.

அண்ணன்-தம்பி போல் வாழ்கிறார்கள்

விழாவில் எஸ்.டி.குமார் பேசும் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் இந்த மண்ணுக்கு விசுவாசமாக வாழ்கிறார்கள். கன்னடர்களும், தமிழர்களும் அண்ணன்-தம்பிகள் போல் வாழ்கின்றனர். இந்த உறவு வலுப்பெற இதுபோன்ற விழாக்கள் பயன்தரும். கன்னடர்களும், தமிழர்களும் ஒன்றுப்படுவது மிகவும் அவசியம். கன்னட தாய்க்கு என்னால் ஆன உதவியாக கன்னட டைப் ரைட்டர் மிஷினில் இருந்த கீ போர்டு முறையை கன்னட எலெக்ட்ரானிக் கீ போர்டு முறையாக கொண்டு வருவதற்கு கோத்ரேஜ் நிறுவனத்திடம் கூறினேன். மேலும் இதற்கு அப்போது முதல்-மந்திரியாக இருந்த தேவேகவுடா, கன்னட வளர்ச்சித் துறை மந்திரியாக இருந்த லலிதா நாயக் ஆகியோர் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரி கோவிந்தராஜ் மூலமாக அணுகி ஒப்புதல் பெற்று எலெக்ட்ரானிக் தட்டச்சு கொண்டு வர மூலக்காரணமாக இருந்தேன். இந்த மண்ணுக்கும், கன்னட தாய்க்கும் நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம் என்பதற்காக இதனை இந்த விழாவில் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விழாக் குழு ஏற்பாட்டாளர் சதீஷ் உள்பட கன்னட அமைப்பினர் கரவொலி எழுப்பி பாராட்டினர். 

Next Story