செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜ.க.வினர் 935 பேர் கைது


செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜ.க.வினர் 935 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2020 3:59 AM IST (Updated: 10 Nov 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் வேல்யாத்திரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, வேல் யாத்திரை பொறுப்பாளரும் மாநில நிர்வாகியுமான நரேந்திரன், மாநில பா.ஜ.க. செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசும்போது கூறியதாவது:-

பொதுமக்களிடம் தமிழ் வேறு, ஆன்மிகம் வேறு என போலி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்துக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பா.ஜ.க. முன்னால் நிற்கும்.

கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்து கருப்பர் கூட்டம் அவமானப்படுத்தியது. அதனை யாரும் தட்டி கேட்கவில்லை, ஆனால் பா.ஜ.க. அதனை தட்டி கேட்டது. மு.க.ஸ்டாலின் கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்குகிறார். தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தந்த தமிழக அரசு பா.ஜ.க.வுக்கு மறுக்கிறது. தேசிய அரசியலும், ஆன்மிக அரசியலும் தமிழகத்தில் காலூன்றுவதற்கான நேரம் நெருங்கி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

935 பேர் கைது

தடையை மீறி வேல் யாத்தரை தொடங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்

வேல் யாத்திரை மேடை அருகே உள்ள மசூதியில் நேற்று மதியம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது மாநில தலைவர் எல்.முருகன் சைகை மூலம் பேச்சை சிறிது நேரம் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று அண்ணாமலையும் பேச்சை நிறுத்தினார். தொழுகை முடிந்தவுடன் அவர் தனது பேச்சை மீண்டும் தொடங்கினார். இதனால் அங்கு 5 நிமிடம் அமைதி நிலவியது.

மாநில தலைவர் முருகனை வரவேற்கும் விதமாக மேடை கச்சேரி, தாரை தப்பாட்டம், கரகாட்டம், அலங்கரிக்கப்பட்ட குடைகள், சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து இருபுறமும் பெண்கள் மலர் தூவியும், சிறுவர் சிறுமிகள் முருகபெருமான் வேடம் அணிந்தும் வரவேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பலராமன் ஆள் உயர வேல் ஒன்றை மாநில தலைவர் முருகனுக்கு பரிசாக வழங்கினார்.

எச்.ராஜா கைது

பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிர்வாகிகளுடன் காஞ்சீபுரம் சங்கர மடத்தில் இருந்து வாகனத்தில் தடையை மீறி வேல்யாத்திரை தொடங்க முயன்றார். அப்போது காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் எச் ராஜா உள்பட 233 பேரை கைது செய்தனர்.

அப்போது எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு தமிழக அரசு அடி பணிந்து விட்டது. அதனால் வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் கலந்து கொண்ட கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். நோய்த்தொற்று முற்றிலும் குறைந்து விட்டதால் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு கூறி இருக்கிறது.

தமிழக அரசு மறுபரிசீலனை செய்து வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் டிசம்பர் 6-ந்தேதி வரை வேல் யாத்திரை நடக்கும். மேலும் யாத்திரைக்கு அனுமதி வழங்காததால் அ.தி.மு.க. கூட்டணி தொடருமா என நிருபர்கள் கேட்டதற்கு கூட்டணி வேறு, போராட்டம் வேறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story