திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் பாய், பாத்திரத்துடன் நூதன போராட்டம்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் பாய், பாத்திரத்துடன் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2020 4:13 AM IST (Updated: 10 Nov 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் பாய், பாத்திரத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று காலை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீரென கையில் பாய் மற்றும் பாத்திரங்களுடன் வந்திருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் கையில் தங்களது கோரிக்கைகளை எழுதி அந்த பதாகைகளை வைத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் செங்குன்றம் காந்திநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் வழங்கக்கோரி கடந்த 2014-ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தோம்.

ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், பொன்னேரி தாலுகா அலுவலகம், ஆவடி வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர்களிடம் என பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் அனைவரும் எங்களுக்கு அரசு வழங்கும் பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்கக் கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு எங்கள் கோரிக்கை சம்பந்தமான பதாகைகளை கொண்டு வந்து பாய் மற்றும் பாத்திரத்துடன் குடியேற முடிவு செய்தோம்.

வெளியே செல்ல மாட்டோம்

எங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என கூறி பாயை தரையில் போட்டு திருநங்கைகள் அனைவரும் படுத்து தங்களுக்கு பசுமை வீடு வழங்கக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு பாய் போட்டு படுத்து கையில் பாத்திரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். பின்னர் போலீசார் சமாதானம் செய்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பான மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story