பள்ளிகளை திறப்பது குறித்து தென்காசி மாவட்டத்தில் 232 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் பெற்றோர்கள் திரளாக பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து 232 இடங்களில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
தென்காசி,
தமிழக அரசு வருகிற 16-ந் தேதி பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியினர் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது.
232 பள்ளிகள்
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 232 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நேற்று பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெற்றோர்கள் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். கல்வித்துறை அலுவலர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று பெற்றோர்களிடம் கருத்து கேட்டனர்.
பெரும்பாலானோர் ஆதரவு
இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கூடங்களை திறக்க ஆதரவு தெரிவித்தனர். சிலர் மட்டும் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்த அறிக்கை பள்ளிக்கல்வி துறையில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கல்வி அதிகாரி ஆய்வு
புளியங்குடியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை தென்காசி முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி ஆய்வு செய்தார். பள்ளியில் செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு வழிமுறைகளை ஆய்வு செய்தபின் பெற்றோர்களிடம் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story