தீபாவளி பண்டிகையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகத்தில் வருகிற 14-ந் தேதியில் இருந்து 16-ந் தேதி வரை 3 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. குறிப்பாக வருகிற 16-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகை கர்நாடகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட பெங்களூருவில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தயாராகி வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் இருந்து மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு குறைந்த அளவே கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வருகிற 13-ந் தேதியில் இருந்து இந்த சிறப்பு பஸ்களின் சேவை தொடங்க உள்ளது.
வெளிமாநிலங்களுக்கும்...
பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாப்புரா, உப்பள்ளி, சிருங்கேரி, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, சிர்சி, கார்வார், கலபுரகி, கொப்பல், பல்லாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல, பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள சேட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, உன்சூர், பிரியப்பட்டணா, விராஜ்பேட்டை, குசால்நகர், மடிகேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுபோல, சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி, விஜயவாடா, ஐதராபாத், திருவனந்தபுரம், கோட்டயம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களின் பிற பகுதிகளுக்கும் கே.எஸ்.ஆர். டி.சி. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 4-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒன்றாக சேர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்தால், 5 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அரசு போக்குவரத்தும் கழகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story