இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் சித்தராமையா கருத்து
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கம், அதனால் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,
ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இது ஜனநாயகத்தின் தோல்வி. முறைகேடான வழியில் ஈட்டிய பணம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருப்பது வருத்தத்தை தருவதாக உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக உள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக வந்தால் தங்கள் தொகுதிக்கு அதிக திட்டங்கள் கிடைக்கும் என்று வாக்காளர்கள் நினைப்பது உண்டு.
ஆனால் சட்டமன்ற தேர்தலில் இதே முடிவு வராது. ஜனநாயகத்தில் தேர்தல் முடிவை ஏற்க வேண்டும். இந்த முடிவால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைய தேவை இல்லை. இதனால் எந்த கட்சியும் பலம் அடையாது, பலவீனமும் ஆகாது. இது மாநில மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.ஆர்.நகருக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். ஆனால் அதன் பலன் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. முனிரத்னாவுக்கு கிடைத்துள்ளது.
சுலபமாக வெற்றி
முனிரத்னா கட்சி மாறிய நாளில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் நாங்கள் வேட்பாளரை சிறிது தாமதமாக தேர்வு செய்துவிட்டோம் என்று கருதுகிறேன். காங்கிரஸ் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சிராவில் டி.பி.ஜெயச்சந்திரா அந்த பகுதிக்கு நதி நீரை கொண்டு வந்தார். ஆனால் பா.ஜனதாவில் முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
மக்கள் சேவையாற்றுகிறவர்களை மக்கள் கண்டறிந்து ஆதரிக்க வேண்டும். 2 தொகுதிகளிலும் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு சென்றுவிட்டது. அதனால் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக சிராவில் அக்கட்சி தனது வாக்குகளை தக்க வைத்திருந்தால், அங்கு பா.ஜனதா இவ்வளவு சுலபமாக வெற்றி பெற்றிருக்க முடியாது.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story