டைட்டானிக் பட பாணியில் போட்டோ எடுக்க முயன்று உயிரிழந்த புதுமண ஜோடி பரிசலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து சம்பவம்


டைட்டானிக் பட பாணியில் போட்டோ எடுக்க முயன்று உயிரிழந்த புதுமண ஜோடி பரிசலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து சம்பவம்
x
தினத்தந்தி 11 Nov 2020 12:42 AM IST (Updated: 11 Nov 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாவட்டம் திருமகூடலுவில், ஆற்றில் பரிசலில் சென்று டைட்டானிக் பட பாணியில் போட்டோ எடுக்க முயன்ற புதுமண ஜோடி கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மைசூரு, 

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைவது அவர்களது திருமணம்தான். முன்பெல்லாம் திருமணத்தின்போது உற்றார், உறவினர்களை அழைத்து தடபுடலாக விருந்து வைத்து மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விழாவைப்போல கொண்டாடுவார்கள். ஆனால் மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள முடியாது. வீட்டின் பெரியோர்கள் பலவித கட்டுப்பாடுகளை விதித்திருப்பார்கள்.

தற்போதைய நவீன காலத்தில் திருமணத்தில் இணையும் புதுமண ஜோடிகள் ஒருபடி மேலே போய் ‘போட்டோ சூட்‘ என்று சொல்லப்படும் திருமணத்திற்கு முன்பே புகைப்படம், வீடியோக்களை சினிமா பாணியில் எடுத்து மகிழ்கிறார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க சென்ற ஒரு மணமகனும், மணமகளும் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் மைசூரு மாவட்டத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

என்ஜினீயர்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா கியாத்தமாரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு(வயது 28). கட்டிட என்ஜினீயர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா(20) என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டு பெரியோர்களாலும் திருமண நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் வருகிற 22-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக சந்துருவும், சசிகலாவும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க திட்டமிட்டனர்.

இதையொட்டி நேற்று அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுடன் முடுகுதோரே பகுதியில் உள்ள மல்லிகார்ஜுனா கோவிலுக்கு சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஒரு வேனில் காவிரி, கபினி மற்றும் சப்திகா ஆகிய 3 ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் திருமகூடலு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

போட்டோ சூட்

அந்த இடத்தை பார்த்ததும் மணப்பெண் சசிகலா அங்கு ‘போட்டோ சூட்‘ நடத்தலாம் என்று தெரிவித்தார். அதற்கு மணமகன் சந்துருவும் சம்மதித்தார். பின்னர் அவர்கள் அங்கு ஒரு படகில் ஆற்றில் சென்று பிரபல ஆங்கில திரைப்படமான ‘டைட்டானிக்‘ திரைப்படத்தில் கப்பலின் முன்புறம் கதாநாயகனும், கதாநாயகியும் கைகளை விரித்து ஒன்றாக நின்றபடி இருப்பதுபோன்று புகைப்படமும், வீடியோவும் எடுக்க முடிவு செய்தனர்.

ஆனால் அங்கு படகு இல்லாததால், அங்கிருந்த பரிசலில் செல்ல முடிவு செய்தனர். அதன்படி பரிசலில் சந்துரு, சசிகலா, சந்துருவின் நண்பர் மற்றும் புகைப்பட கலைஞர் ஒருவர் ஆகியோர் ஆற்றுக்குள் சென்றனர்.

டைட்டானிக் பட பாணியில்...

பரிசல் ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மணப்பெண் சசிகலாவும், மணமகன் சந்துருவும் டைட்டானிக் பட பாணியில் நின்று புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சசிகலா நிலைதடுமாறினார். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் சசிகலா ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு ஆற்றில் குதித்து சசிகலாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். மேலும் அந்த சந்தர்ப்பத்தில் பரிசலும் ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து பரிசல்காரரும், சந்துருவின் நண்பரும் சசிகலாவையும், சந்துருவையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் சுழன்றடித்து வந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

புதுமண ஜோடி பலி

இந்த சம்பவத்தை கரைப்பகுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சந்துரு மற்றும் சசிகலாவின் குடும்பத்தினர் பதறியடித்து கூச்சலிட்டனர். அதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் சிலர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து சந்துருவின் நண்பனை மீட்டனர். பரிசல்காரரும் காப்பாற்றப்பட்டார். ஆனால் சசிகலாவும், சந்துருவும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தலக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் சசிகலா மற்றும் சந்துருவின் உடல்களை மீட்டனர். அப்போது அவர்களின் உடல்களைப் பார்த்து இருவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுமண ஜோடி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Next Story