மதகடிப்பட்டு வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருபுவனை,
திருபுவனை அருகே மதகடிப்பட்டில் செவ்வாய்க் கிழமை தோறும் மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்படும். அவற்றை திருபுவனை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள்.
நாளடைவில் மாடுகளுக்கு தேவையான தீவனம், கயிறுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான காய்கறி, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அனைத்து விதமான பொருட்களும் சந்தையில் விற்கப்பட்டு வந்தன.
போக்குவரத்து நெரிசல்
இதற்காக வாரந்தோறும் ஏராளமானோர் சந்தைக்கு வந்து செல்கிறார்கள். தற்போது கடை போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கடைகள் நிரம்பி வழிகின்றன. அதேநேரத்தில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலும் கடைகள் போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வருவோரும், வியாபாரிகளும் மோட்டார் சைக்கிள்கள், மினிலாரிகள் போன்ற தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன.
அபராதம் வசூல்
இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று மதகடிப்பட்டு சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகள், மக்கள் கூட்டம் அலைமோதியதால் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. சாலையில் போக்குவரத்து நெரிசலும் உருவானது.
இதுபற்றி அறிந்து மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், திருபுவனை அரசு மருத்துவமனை அதிகாரி விக்னேஷ்வரன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் ஆகியோர் அங்கு வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர் களுக்கும் ரூ.100 அபராதம் வசூலித்ததுடன் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்
Related Tags :
Next Story