தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்


தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 11 Nov 2020 5:58 AM IST (Updated: 11 Nov 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.367¾ கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் காலை 9 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி தொடங்கி வைக்கிறார். அங்கு ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறார். அங்கு பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), பள்ளி கல்வித்துறை, போலீஸ் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.22 கோடியே 37 லட்சம் மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

பள்ளி கல்வித்துறை, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.328 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.

நலத்திட்ட உதவி

மேலும் பல்வேறு துறைகள் மூலம் 15 ஆயிரத்து 792 பேருக்கு ரூ.37 கோடியே 55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய, மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

உற்சாக வரவேற்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வருவதையொட்டி தூத்துக்குடி மாநகரில் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வல்லநாடு முதல் தூத்துக்குடி வரை கட்சி கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. ஆங்காங்கே அலங்கார தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Next Story