திண்டுக்கல்லில் தீபாவளி திருடர்களை கண்டறிய 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
திண்டுக்கல்லில் தீபாவளி கூட்ட நெரிசலில் உலாவும் திருடர்களை கண்டறிய 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கடைக்காரர்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதையொட்டி திண்டுக்கல்லில் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் கடைகளுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதுதவிர சாலையோரத்தில் தற்காலிக கடைகள் அமைத்தும், ரெடிமேடு ஆடைகள் விற்கப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மெயின்ரோடு, ஆர்.எஸ்.சாலை, கிழக்கு ரதவீதி, கடைவீதி ஆகிய பகுதிகளில் சாலையோர கடைகள் அதிகமாக உள்ளன. இந்த சாலையோர கடைகளில், பெரிய ஜவுளிக்கடைகளை போன்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் திண்டுக்கல் மெயின்ரோடு, பஸ்நிலைய பகுதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்வதற்கு நகர் முழுவதும் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காண்பித்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவது போன்று மக்களுடன் சேர்ந்து உலாவும் திருடர்கள், அப்பாவி நபர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து கொண்டு தப்பிவிடலாம். எனவே, அதை தடுக்கும் வகையில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கூட்டத்தில் சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து செல்கின்றனர்.
இதேபோல் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சந்தேகப்படும் நபர் களை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுதவிர பெரியார்சிலை, மணிக்கூண்டு, கிழக்கு ரதவீதி ஆகிய 3 இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கோபுரங் களில் போலீசார் நின்றபடி தொலைநோக்கி மூலம் கூட்டத்தை கண்காணிப்பார்கள். அப்போது கூட்டத்தில் உலாவும் திருடர்கள் குறித்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதற்காக சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story