ரசிகர்களிடம் ஆர்வமில்லை, உரிமையாளர்களும் முன்வராததால் திண்டுக்கல்லில் ஒரே ஒரு தியேட்டர் திறப்பு
புதிய சினிமாக்கள் வெளியாகாததால் ரசிகர்களிடம் ஆர்வமில்லாத நிலையில், உரிமையாளர்களும் முன்வராததால் திண்டுக்கல்லில் ஒரே ஒரு தியேட்டர் மட்டும் திறக்கப்பட்டது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 7 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. புதிய சினிமாக்களும் வெளியாகாமல் முடங்கின. இதனால் தியேட்டர்களுக்கு சென்று சினிமாவை பார்த்து ரசித்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே கொரோனா தாக்கம் குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நேற்று முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து தியேட்டர்கள் சுத்தம் செய்யப்பட்டு, நேற்று தயார் நிலையில் இருந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 27 தியேட்டர் கள் உள்ளன. இந்த தியேட்டர் களை சுத்தம் செய்து, கிருமிநாசினி மருந்து தெளித்து தயாராக வைக்கப்பட்டு இருந்தன. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் புதிய சினிமாக்கள் வெளியாகாததால் ரசிகர்களிடம் போதிய ஆர்வம் இல்லை. மேலும் பெரும்பாலான தியேட்டர்களை திறப்பதற்கு உரிமையாளர்களும் முன்வரவில்லை. இதனால் திண்டுக்கல் நகரில் 11 சினிமா தியேட்டர்கள் உள்ள நிலையில், நேற்று ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே திறக்கப்பட்டது. அந்த தியேட்டருக்கும் மிகவும் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வந்தனர்.
அவர்களில் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் தியேட்டருக்குள் சமூக இடைவெளியுடன் ரசிகர்கள் அமர வைக்கப்பட்டனர். சினிமா தொடங்கும் முன்பு திரைக்கு கற்பூரம் காண்பிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது புதிய சினிமாக்கள் வெளியானால் தான் ரசிகர்கள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story