தேவாலாவில் தனியார் தார் கலவை மையத்துக்கு ‘சீல்’ வைக்க முயற்சி - கதவை திறக்காததால் அதிகாரிகள் ஏமாற்றம்
தேவாலாவில் தனியார் தார் கலவை மையத்துக்கு ‘சீல்’ வைக்க அதிகாரிகள் வந்தனர். ஆனால் அந்த மையத்தை ஆதரவாளர்கள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டதால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் தனியார் தார் கலவை மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் தார் கலவை மையத்தால் பொது மக்கள் வசிக்க முடியாத வகையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக போக்கர் காலனி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனியார் தார் கலவை மையத்தை பூட்டி சீல் வைக்க கடந்த 3-ந் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஊட்டியில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன் நேற்று பகல் 12 மணிக்கு கூடலூர் தாசில்தார் (பொறுப்பு) ராம்குமாரை சந்திக்க வந்தார். இதையறிந்த போக்கர் காலனியை சேர்ந்த பெண்கள் அங்கு வந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளரை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தனியார் தார் கலவை மையத்தை பூட்டி சீல் வைக்க அரசு உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர்.
தனியார் தார் கலவை மையத்தில் உள்ள எந்திரங்களை மட்டும் ‘சீல்’ வைக்க வருவாய்த்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன் விளக்கம் அளித்தார். இதை போக்கர் காலனி மக்கள் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன், தாசில்தார் ராம்குமாரை சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறினார். தொடர்ந்து தாசில்தார் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டார். பின்னர் தேவாலாவில் உள்ள தனியார் தார் கலவை மையத்தை சீல் வைக்க முடிவு செய்தனர்.
பின்னர் தாசில்தார் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தனியார் கார் கதவை பூட்டி சீல் வைக்க சென்றனர். இதையறிந்த தார் கலவை மையத்தின் உரிமையாளரின் ஆதரவாளர்கள் பலர் அதன் உள்ளே இருக்கும் கட்டிடத்துக்குள் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டனர். இதனால் அதிகாரிகளால் எந்திரங்களுக்கு சீல் வைக்க முடியவில்லை. இதனால் தார் கலவை மையத்தில் இருந்து வெளியே வருமாறு அதிகாரிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலன் இல்லை.
சம்பவ இடத்துக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் அகமது ஆகியோர் விரைந்து வந்து தார் கலவை மையத்துக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை. இதனிடையே மாலை 6 மணி ஆகிவிட்டதால் சீல் வைக்க முடியாமல் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையை தார் கலவை மையத்தை சீல் வைக்க வேண்டுமென போக்கர் காலனி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தார்கலவை மையத்தின் நுழைவு வாயில் கதவில் சீல் வைப்பதற்கான உத்தரவு ஆணையை அதிகாரிகள் ஒட்டினர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, சீல் வைப்பதற்கான ஆணையை கதவில் ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இனிவரும் நாட்களில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story