ராய்ச்சூர் அருகே, கார்கள் நேருக்குநேர் மோதல் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலி மேலும் இருவர் படுகாயம்
ராய்ச்சூர் அருகே, 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராய்ச்சூர்,
ராய்ச்சூர் (மாவட்டம்) நகரையொட்டிய மிர்ளா கிராஸ் பகுதியில் நேற்று அதிகாலை இரு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன. ஒரு காரில் வந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் மற்றொரு காரில் வந்த 2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் எரகெரே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூர் ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
மருத்துவ மாணவர்கள்
போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் பசவராஜ், கணேஷ், அபிஷேக் என்பதும், காயமடைந்தவர்கள் சித்தார்த்தா, பீமாரெட்டி ஆகியோர் என்பதும், பலியான 3 பேரும் ராய்ச்சூரில் உள்ள நவதோயா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு சென்று விட்டு திரும்பியதும் தெரியவந்தது. திரும்பும் வழியில் தெலுங்கானா நோக்கி சென்ற காரும், பலியானவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக எரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மந்திராலயாவுக்கு சென்று விட்டு திரும்பிய மருத்துவ மாணவர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story