பெங்களூருவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
பெங்களூருவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக ரசாயனம் பதுக்கி வைத்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகுட்டதஹள்ளி அருகே பாபுஜிநகர் 1-வது மெயின் ரோட்டில் சச்சன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலேயே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தொழிற்சாலையில் குடோன் அமைத்து சச்சன்ராஜ் ரசாயன திரவியங்களை வைத்திருந்தார். அதாவது சச்சன்ராஜிக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை பொம்மசந்திராவில் உள்ளது. அந்த தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனம் அடங்கிய பேரல்கள் மற்றும் கிருமி நாசினி பேரல்களை சச்சன்ராஜ் பாதுகாத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலை அருகே உள்ள குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. அங்கிருந்த ரசாயனம் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தினால் குடோனில் ரசாயனத்துடன் இருந்த அனைத்து பேரல்களும் வெடித்து சிதறியது.
தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை நேற்று முன்தினம் காலையில் இருந்து 22 வாகனங்களில் வந்த 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் சுமார் 24 மணி நேரம் போராடி நேற்று காலை 10 மணிக்கு தீயை முற்றிலும் அணைத்தனர். தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு படையினர் 7 பேர் தீக்காயம் அடைந்தனர்.
ரூ.4 கோடி பொருட்கள் நாசம்
தொழிற்சாலையையொட்டி இருந்த 10 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த கட்டிடங்களில் வசித்த 15 குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். அந்த 15 வீடுகளிலும் இருந்த பணம், நகைகள், உடைமைகள் என அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. கார்கள் உள்பட 7 வாகனங்கள் முற்றிலும் எரிந்து கருகி விட்டது.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகனங்கள், வீடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.4 கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் தெரிவித்துள்ளார்.
தம்பதி கைது
இதற்கிடையில், பாபுஜிநகரில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்படுவதற்கு அங்குள்ள குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரசாயன திரவியங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் ரசாயனம் தயாரிக்க சச்சன்ராஜ் அனுமதி பெற்றிருந்தாலும், குடோன் அமைத்து ரசாயன திரவியங்களை பதுக்கி வைக்க அவர் அனுமதி எதுவும் பெறவில்லை. ஆனால் தனக்கு சொந்தமான பொம்மசந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனம் இருந்த பேரல்களை பதுக்கி வைத்திருந்தே இந்த அளவுக்கு தீ விபத்து ஏற்பட காரணம் என்று தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக பேடராயனபுரா போலீஸ் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளர் சச்சன்ராஜ், அவரது மனைவி கமலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக இருந்த அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து செய்தனர். இந்த தீ விபத்து சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story