பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்: பா.ஜனதா தலைவர்களுக்கு கட்டுப்பாடே இல்லை டி.கே.சிவக்குமார் பேட்டி
பெண் கவுன்சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விஷயத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு கட்டுப்பாடே இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு,
பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா புரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரை பா.ஜனதாவை சேர்ந்த சித்து சவதி எம்.எல்.ஏ. கையை பிடித்து இழுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாகல்கோட்டை மகாலிங்கபுரா புரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர் சவிதா ஹுரகட்லியை பா.ஜனதாவை சேர்ந்த சித்து சவதி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இது பா.ஜனதாவின் கலாசாரம். யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை அக்கட்சியினர் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். பா.ஜனதாா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன நடவடிக்கை
வேறு சம்பவங்களில் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மீது பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தியபோது போலீசார் அங்கு இருந்துள்ளனர். அவர்களின் கண்முன்னே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆயினும் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கிறோம். அந்த நடவடிக்கைக்கு பிறகு நாங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தை முதல்-மந்திரிக்கு விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story