தற்காலிக கடைகள் ஒழுங்குபடுத்தப்படும் வர்த்தக சபையினரிடம் போலீஸ் சூப்பிரண்டு மாறன் உறுதி
நிரந்தர வணிகம் செய்யும் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று வர்த்தக சபையினரிடம் போலீஸ் சூப்பிரண்டு மாறன் உறுதியளித்தார்.
புதுச்சேரி,
புதுவையில் சமீப காலமாக ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் வணிகர்கள் மீது நடத்திடும் தாக்குதல்களை தடுப்பது தொடர்பாக வர்த்தக சபையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வர்த்தக சபை துணைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மாமூல் கேட்டு மிரட்டுவது, வணிக மற்றும் ஓட்டல்களில் தொழிலாளர்களை தாக்குவது, சரக்குகளை கையாள்வதில் பிரச்சினை செய்வது என ரவுடிகளால் ஏற்படும் தொல்லைகள், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அடுக்கடுக்காக தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசியதாவது:-
வணிகர்களின் கோரிக்கைகள் பற்றி உயர் அதிகாரிகளுடன் பேசி உடனடியாக நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல்துறை வாகன ரோந்து அதிகரிக்கப்படும். இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்வது, கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுவது, சாலை விதிகளுக்கு எதிராக நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மிரட்டல்கள் தடுக்கப்படும்
நிரந்தரமாக வணிகம் செய்யும் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிக திடீர் கடைகளை ஒழுங்கு படுத்துவது, ஆன்லைன் மூலம் உணவகங்களில் உணவு ஆர்டர் செய்து அதன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது, நகராட்சி பெயரில் வாகனங்களுக்கு அடிக்காசு வசூலிப்பது என்ற பெயரில் மிரட்டல் விடுப்பது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வர்த்தக சபையின் இணை பொதுச்செயலாளர் தேவகுமார், பொருளாளர் ரவி, உறுப்பினர்கள் தண்டபாணி, முகமது சிராஜ், இளங்கோ, ரவி, புதுவை தொழில் வணிக பேரமைப்பு கருணாநிதி, பெரிய மார்க்கெட் வணிகர் சங்கம் சார்பில் சதாசிவம், சுந்தர்ராஜ், மதுபான விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சுதாகர், ஷாரப் வணிகர் சங்கம் சார்பில் சீனிவாசன், நாகேஷ்சேட், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம், மளிகை மொத்த வியாபாரிகள் சங்கம், நுகர்பொருள் விற்பனையாளர் சங்கம், சிமெண்ட் விற்பனையாளர்கள், ஓட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story