பீகாரில் மோடியின் அலை வீசி இருந்தால் அதிக இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வென்றது எப்படி? நாராயணசாமி கேள்வி
பீகாரில் மோடியின் அலை வீசி இருந்தால், அதிக இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வென்றது எப்படி? என முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
காரைக்கால்,
காரைக்கால் விழிதியூர் சந்தைவெளி மாரியம்மன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அமைச்சரவையில் முடிவு செய்து அது தொடர்பான கோப்பு, கவர்னர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இது கொள்கை முடிவு என கூறி கவர்னர் கிரண்பெடி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில், இது குறித்து இயற்றப்பட்ட சட்டத்துக்கு, அங்குள்ள கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஒப்புதல் அளித்தார். ஆனால் புதுச்சேரி கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது விதிகளுக்கு புறம்பானது. எனவே, இதுகுறித்து உள்துறை அமைச்சரை சந்தித்து ஒப்புதல் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் மாணவர்கள் நீதிமன்றம் சென்றால், அரசு சாதகமாக இருக்கும்.
திசை மாறிய மீனவர்கள்
மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே 96 சதவீதம் குணமடைந்தோர் உள்ள மாநிலமாகவும், அதிக அளவில் பரிசோதனை செய்த மாநிலமாகவும் புதுச்சேரி உள்ளது. தொடர்ந்து, கொரோனா விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையை அரசு தீவிரமாக மேற்கொள்ளும்.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் காரைக்கால் மீனவர்கள் காற்றின் வேகத்தால் திசை மாறி இலங்கை சென்றபோது, அங்குள்ள கடற்படையால் பிடிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதன் விளைவாக, மீனவர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். நாளை (இன்று) அவர்கள் காரைக்கால் வந்து சேருவார்கள். அதேபோல், இலங்கையில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் உடலை காரைக்காலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மோடி அலை என்பது மாயை
பீகாரில் மோடியின் அலை வீசி இருந்தால் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிக இடங்களில் வென்றது எப்படி? மோடி அலை என்பது மாயை. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் தமிழகத்தில் பா.ஜ.க. வேல் யாத்திரை நடத்துகிறது. அதுபோன்ற யாத்திரைக்கு புதுச்சேரியில் அனுமதி வழங்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story