திருச்செந்தூரில் கடையை காலி செய்வதில் தகராறு: தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள் உள்பட 3 பெண்களால் பரபரப்பு
திருச்செந்தூரில் கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், தாய்-மகள் உள்பட 3 பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் குமாரபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகாதேவன். இவருக்கு சொந்தமான வணிக வளாகம், குமாரபுரம் மெயின் ரோடு பகுதியில் உள்ளது. அங்குள்ள ஒரு கடையில் திருச்செந்தூர் குமாரபுரம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடையை காலி செய்வது தொடர்பாக ராதாகிருஷ்ணனுக்கும், சகாதேவனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் கடையில் பட்டாசு விற்பனை செய்வதற்காக, கடையின் முன்பு பட்டாசு பெட்டிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.
தற்கொலை மிரட்டல்
அப்போது அங்கு வந்த சகாதேவன் மனைவி ராஜேசுவரி, மகள் சங்கீதா ஆகிய 2 பேரும் திடீரென்று சமையல் கியாஸ் சிலிண்டர், ரெகுலேட்டர் ஆகியவற்றை எடுத்து கொண்டு ராதாகிருஷ்ணனின் மளிகை கடைக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள், மளிகை கடையின் ஷட்டரை உள்பக்கமாக பூட்டி கொண்டு, ராதாகிருஷ்ணனிடம் கடையை காலி செய்ய வேண்டும், இல்லையெனில் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து கொள்வோம் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட தாய்-மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3 பெண்கள் மீது வழக்கு
இதற்கிடையே ராதாகிருஷ்ணனின் மனைவி முத்துபேச்சி, அங்குள்ள சகாதேவனின் வீட்டின் முன்பு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் விரைந்து சென்று, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராஜேசுவரி, சங்கீதா ஆகிய 2 பேரும் மளிகை கடையில் இருந்து வெளியே வந்தனர். இதுதொடர்பாக சகாதேவன், ராதாகிருஷ்ணன் ஆகிய 2 தரப்பினரிடமும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த மளிகை கடையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக ராஜேசுவரி, சங்கீதா, முத்துபேச்சி ஆகிய 3 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் அடுத்தடுத்து 3 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story