தக்கலை யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் இருபிரிவாக நின்று போராட்டம்
தக்கலை யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் ஒரு பக்கமும், அவர்களுக்கு எதிராக ஊழியர்களும், யூனியன் கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்மநாபபுரம்,
தக்கலை யூனியனுக்கு உட்பட்ட 7 பஞ்சாயத்து தலைவர்கள் கடந்த மாத இறுதியில் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சிம்சன் தலைமையில் தக்கலை யூனியனில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலரின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்திய அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு மீண்டும் 7 பஞ்சாயத்து தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்துக்கு சிம்சன் தலைமை தாங்கினார். போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, யூனியன் அலுவலக காவல் பணியில் இருந்தவர் தாக்கப்பட்டார்.
அதாவது, போராட்டத்தில் பங்கேற்க வந்த பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஊழியரை தள்ளியதாக தெரிகிறது. இதனை அறிந்த யூனியன் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக யூனியன் கவுன்சிலர்களும் களத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பை சேர்ந்தவர்களும் இருபிரிவாக நின்று கொண்டு தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது. யூனியன் அலுவலக காவலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலக ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து கல்குளம் தாசில்தார் ஜெகதா, தக்கலை (பொறுப்பு) துணை சூப்பிரண்டு பீட்டர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) மோகன் ஆகியோர் சமரசப்படுத்த முயன்றனர்.
அப்போது இருதரப்பினரிடமும் நல்ல முடிவு எடுக்கப்படும் என உதவி இயக்குனர் தணிக்கை மோகன் தெரிவித்தார். இதனால் காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 3.30 மணிக்கு கைவிடப்பட்டது. 5.30 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story