சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி? மும்பை அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது


சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி? மும்பை அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது
x
தினத்தந்தி 12 Nov 2020 9:33 PM IST (Updated: 12 Nov 2020 9:33 PM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மையத்தில் இருந்து மும்பையில் உள்ள அலுவலகத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.55 மணிக்கு திடீரென மும்பையில் உள்ள அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சேலம் கிளை மேலாளர் ஜெயபால் என்பவரை தொடர்பு கொண்டு புதிய பஸ்நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெறுவதாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேலம் 4 ரோடு பகுதியில் தங்கியிருந்த அவர் அங்கு சென்றார்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து ஒரு வாலிபர் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேலாளர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பார்த்த போது அங்கு எந்திரம் உடைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதை தவிர வேறு எந்த முயற்சி மேற்கொண்டாலும் உடனடியாக அலாரம் தலைமை அலுவலகத்தில் ஒலித்துவிடும். எனவே ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாலிபர் பணம் எடுக்க வந்தாரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மின்சார பிரச்சினையால் இந்த அலாரம் ஒலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story