வரவரராவுக்கு தனியார் டாக்டர்கள் பரிசோதனை நடத்தலாம் ஐகோர்ட்டு அனுமதி


வரவரராவுக்கு தனியார் டாக்டர்கள் பரிசோதனை நடத்தலாம் ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 13 Nov 2020 2:18 AM IST (Updated: 13 Nov 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

வரவரராவுக்கு தனியார் டாக்டர்கள் பரிசோதனை நடத்த மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

மும்பை,

தெலுங்கானாவை சேர்ந்த கவிஞர் வரவர ராவ் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவர் எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 81 வயதான இவர் தற்போது நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மோசமான உடல்நிலையில் ஜெயிலில் படுக்கையில் உள்ளார்.

எனவே அவருக்கு தனியார் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டும், ஜாமீன் கேட்டும் வரவர ராவின் மனைவி ஹேமலதா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

தனியார் டாக்டர்களுக்கு அனுமதி

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.கே.மேனன் மற்றும் எஸ்.பி. தாவடே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது ஹேமலதா தரப்பில் ஆஜரான வக்கீல் வரவரராவின் உடல் நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும், அவர் ஜெயிலில் உயிரிழந்தால் அதை ‘கஸ்டோடியல் டெத்’ ஆக கருத வேண்டும் என்றார். மேலும் வக்கீல், ‘வரவர ராவ் முதுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டயாப்பர் அணிந்து இருக்கிறார். இவரா நீதியிடம் இருந்து தப்பி ஓடிவிடப்போகிறார்?’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கணொலி காட்சி மூலம் லீலாவதி ஆஸ்பத்திரி டாக்டர் வரவரராவை பரிசோதிக்க அனுமதி வழங்கினர். மேலும் தேவைப்பட்டால் டாக்டர்கள் நேரடியாக அவரை பரிசோதிக்கவும் அனுமதி அளித்தனர்.

Next Story