குடிநீர் பிரச்சினையைத் தீர்க்காத கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகை


குடிநீர் பிரச்சினையைத் தீர்க்காத கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 13 Nov 2020 4:23 AM IST (Updated: 13 Nov 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்காத பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்ட போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாகூர், 

பாகூரை அடுத்த குருவிநத்தம் நடுத்தெரு, கிழக்குத்தெரு வட்டாரம் மற்றும் வாழப்பட்டு ஆகிய பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. தற்போது வினியோகம் செய்யப்படும் குடிநீர் மாசு கலந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனை கண்டித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் குருவிநத்தம் கிராம மக்கள் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் தரமான குடிநீர் வழங்க கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தள்ளுமுள்ளு

இதனால் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர் அணி தலைவர் அருள்ஒளி, தினேஷ், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையொட்டி ஏற்கனவே அங்கு போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தனர். இதையும் மீறி பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றவர்களை பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story