மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பண்டிகைக்கு துணிகள் எடுக்க குவிந்த மக்கள் கூட்டம்


மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பண்டிகைக்கு துணிகள் எடுக்க குவிந்த மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2020 4:39 AM IST (Updated: 13 Nov 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளிக்கடைகளில் துணிகள் எடுக்க மக்கள் கூட்டம் குவிந்திருந்தன. அதேபோல் பட்டாசுகள் வாங்கவும் ஆர்வம் காட்டினர்.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புதுத்துணிகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை காலங்களில் புத்தாடைகள் எடுக்க ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி, இந்த ஆண்டு கொரோனா காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் சற்று தாமதமாக தொடங்கினாலும், தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது.

சென்னை தியாகராயநகர், வண்ணாரப் பேட்டை, பாண்டிபஜார், பெரம்பூர், வியாசர்பாடி, சவுகார்பேட்டை, பாரிமுனை, புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் இருக்கும் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்திருந்தது. நேற்று காலை மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்த போதிலும், கணிசமான அளவிலான பொதுமக்கள் மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டினர்.

சமூக இடைவெளி

சென்னை தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வந்த போதிலும், சில இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கூட்டம், கூட்டமாக சென்றதையும் பார்க்க முடிந்தது.

கடந்த ஆண்டைவிட விற்பனை சற்று குறைவு என்று வியாபாரிகள் கூறினாலும், கொரோனா காலத்தில் இதுபோன்ற வியாபாரம் ஓரளவுக்கு மனநிறைவை தருவதாக அவர் கள் கூறினர். ஜவுளிக்கடைகள், மின்னணு பொருட்கள் உள்பட பல கடைகளில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பட்டாசு கடைகள்

அதேபோல், தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது பட்டாசு தான். அந்தவகையில் பட்டாசு கடைகளிலும் நேற்று விற்பனை களைக்கட்டியது. புதுரக பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டினர். பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு விதமான அதிரடி சலுகைகளையும் பட்டாசு கடை உரிமையாளர்கள் போட்டிப்போட்டு அறிவித்து இருந்தனர். கடந்த சில ஆண்டுகளைவிட விற்பனை சற்று குறைவாகத்தான் இருக்கிறது என வியாபாரிகள் பலர் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை இறுதிநாள் விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. 

Next Story