நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு. இணைப்பு) நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 30-ந்தேதி வரை உள்ள சம்பள உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் மோகன் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவை தொகையை ஏற்கனவே தருவதாக மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால் இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் சரியாக பதில் இல்லை. அதனால் நாங்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை
சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் வண்ணமுத்து, வரகுணன், மாரியப்பன், முருகன், நாகராஜன், காசி, சுடலைமணி, கண்ணம்மாள், மாரியம்மாள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உடனே நெல்லை மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story