தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்குவதற்கு திண்டுக்கல்லில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல்,
தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபாவளிக்கு புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு, திண்டுக்கல் நகருக்கு தினமும் படையெடுக்கின்றனர்.
பொதுமக்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஜவுளிக்கடைகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதுதவிர திண்டுக்கல் மெயின்ரோடு, கிழக்கு ரதவீதி, ஆர்.எஸ்.சாலை, கமலாநேரு மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர துணிக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலையோர கடைகளில் குழந்தைகள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆடைகள் விற்கப்படுகின்றன.
பெரும்பாலும் ரெடிமேடு ஆடைகளே அதிகமாக விற்கப்படுகின்றன. இதற்கிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் , திண்டுக்கல்லுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் திரளான மக்கள் திண்டுக்கல்லில் குவிந்தனர். பஸ்கள் மட்டுமின்றி கார்கள், இருசக்கர வாகனங்களிலும் மக்கள் வந்தனர்.
அதிலும் மாலை நேரத்தில் தான் அதிக அளவில் மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெரிசலை சமாளிக்க கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மெயின்ரோடு, ஏ.எம்.சி. சாலை, சாலைரோடு, ரதவீதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மக்கள் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மெயின்ரோடு, கிழக்கு ரதவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story