வேலூரில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை, துணை இயக்குனர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு - போலீசார் சோதனை


வேலூரில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை, துணை இயக்குனர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு - போலீசார் சோதனை
x
தினத்தந்தி 13 Nov 2020 7:06 PM IST (Updated: 13 Nov 2020 7:06 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை, துணை இயக்குனர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் (2-வது கோட்டம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் (2-ம் வட்டம்) ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இதேபோல மாவட்ட அறிவியல் மையம் அருகே இதே துறையைச் சேர்ந்த (முதல் வட்டம்) துணை இயக்குனர் அலுவலகமும், இணை இயக்குனர் அலுவலகமும் செயல்படுகிறது. இந்த 4 அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முறைகேடாகப் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) லட்சுமிகாந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அறிவியல் மையம் அருகே உள்ள அலுவலகத்தில் நேற்று மாலை சோதனையை தொடங்கினர். இதேபோல மற்றொரு குழுவினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் உள்ள அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்தனர்.

இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான சோதனையில் அலுவலகத்தில் இருந்து பட்டாசு மற்றும் இனிப்பு வகைகள் பெட்டி பெட்டியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த அலுவலகம் வெளியே நின்றிருந்த அதிகாரியின் காரையும் போலீசார் திறந்து சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்தச் சோதனை வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story