கல்லூரி மாணவியை கற்பழித்த 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை பெலகாவி செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
கல்லூரி மாணவியை கற்பழித்த 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பெலகாவி செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெலகாவி,
பெலகாவி மாவட்டம் காகதி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி தனது நண்பருடன் காகதி அருகே உள்ள கோவில் குளத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சென்றிருந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் குளத்தின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 5 வாலிபர்கள், மாணவியின் நண்பரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். பின்னர் அந்த மாணவியை கடத்தி சென்றதுடன், அவரை 5 வாலிபர்களும் சேர்ந்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவியை கற்பழித்ததாக சஞ்சு தட்டி, சுரேஷ், சுனில், மகேஷ் சிவனகோலா, சோமசேகர் ஆகிய 5 பேரையும் கைது செய்தார்கள். 5 பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் மீது காகதி போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
5 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெலகாவி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் 5 வாலிபர்கள் மீதும் காகதி போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அப்போது மாணவியை கடத்தி சென்று சஞ்சு தட்டி, சுரேஷ், சுனில், மகேஷ் சிவனகோலா, சோமசேகர் ஆகிய 5 பேரும் கற்பழித்தது ஆதாரத்துடன் நிரூபணமானதால், அவர்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story