கர்நாடக மந்திரிசபை விரைவில் விஸ்தரிப்பு முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
கர்நாடக மந்திரிசபை விரைவில் விஸ்தரிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்பே நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பீகார் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் முடிவடைந்துவிட்டது. 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதால், முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மந்திரிசபையை விஸ்தரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். மந்திரி பதவியை கைப்பற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இப்போது “லாபி“ செய்ய தொடங்கிவிட்டனர். எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, ராஜூகவுடா, பூர்ணிமா, சங்கர் பட்டீல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வீட்டில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
அழைப்பு விடுப்பார்கள்
அவர்கள் நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரைவில் விஸ்தரிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க நான் இன்று (அதாவது நேற்று) டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தேன். பா.ஜனதா மேலிட தலைவர்கள் பீகார் மாநிலத்தில் புதிய அரசை அமைக்கும் பணியில் பரபரப்பாக உள்ளனர். அங்கு புதிய ஆட்சி அமைந்த பிறகு டெல்லி வரும்படி மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் பீகாரில் புதிய ஆட்சி அமைந்தவுடன் மேலிட தலைவர்கள் எனக்கு அழைப்பு விடுப்பார்கள். அப்போது நான் டெல்லி செல்வேன்.
மந்திரிசபை விரிவாக்கம்
மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். மேலிடம் என்ன சொல்கிறதோ அதன்படி நடந்துகொள்வேன். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெறும். மந்திரி பதவியை பெற எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவதில் தவறு இல்லை. அவர்கள் இப்போது கூடி ஆலோசிக்காமல் வேறு எப்போது ஒன்று சேர்ந்து விவாதிப்பார்கள்?.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story