திருவாரூர் மாவட்டத்தில் கன மழை தீபாவளி விற்பனை பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது.
திருவாரூர்,
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் எனவும், குறிப்பாக கடலோர டெல்டா பகுதியான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்றுகாலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் கன மழை விட்டு, விட்டு பெய்து வந்தது. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் அனைவரும் புத்தாடைகள் வாங்க குடும்பம், குடும்பமாக கடைவீதிகளுக்கு படையெடுத்து வந்த நிலையில் மழையினால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர்.
தீபாவளி விற்பனை பாதிப்பு
இந்த மழையினால் சாலையோர வியாபாரிகளின் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. இந்த வியாபாரிகள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தேங்கி இருந்த மழைநீரில் வாகனங்கள் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர்.
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதே போல் தாழ்வான பகுதிகளிலும், தண்ணீர் தேங்கி நின்றது. பழதடைந்த சாலைகள் சேறு, சகதியுமாக காட்சியளித்து. கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மன்னார்குடி
இதேபோல மன்னார்குடி, பரவாக்கோட்டை மற்றும் உள்ளிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் நடைபாதை வியாபாரிகள் மழையில் நனைந்தபடி விற்பனை செய்தனர். பொதுமக்களும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை சிரமத்துடனே வாங்கிச் சென்றனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய பலத்த மழை, நேற்று முழுவதும் நீடித்தது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, ஓவர்ச்சேரி, மரக்கடை, திருராமேஸ்வரம், பூந்தாழங்குடி, தண்ணீர்குன்னம், ராமநாதபுரம், குலமாணிக்கம், புனவாசல், திட்டச்சேரி, கார்நாதன்கோவில், பாரதிமூலங்குடி, நாகங்குடி பழையனூர், சாத்தனூர், வடகட்டளை, கானூர், வடபாதிமங்கலம், உச்சுவாடி, பொதக்குடி, பூதமங்கலம், ஓகைப்பேரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்து கொண்டே இருந்ததால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க சென்ற மக்கள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story