காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம்: ஓட்டல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் ஆனதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி,
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் ஆனதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் பகுதியை சேர்ந்த சிவா. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 26). இவர் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கேரளாவை சேர்ந்த தனது உறவு பெண் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் செல்போன் மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சந்தோசின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அவருடைய காதலி, தனக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் நடந்ததாக கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்களிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
பின்னர் வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் எலி மருந்தை (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் கோத்தகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோத்தகிரியில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் ஆனதால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story