தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் கவிழ்ந்தன; டிரைவர் உள்பட 2 பேர் சாவு


தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் கவிழ்ந்தன; டிரைவர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 15 Nov 2020 2:07 AM IST (Updated: 15 Nov 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி, 

பெங்களூருவில் இருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சேலம் நோக்கி வந்தது. இந்த லாரியை டிரைவர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில் பிரிவு சாலையில் நிறுத்தி விட்டு நேற்று அதிகாலை தூங்கி கொண்டு இருதார். அப்போது கொல்கத்தாவில் இருந்து பேட்டரி பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரளாவுக்கு சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரங்கராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இதில் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார்.

தொப்பூர் பிரிவு ரோட்டில் வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது பேட்டரி ஏற்றி வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் 2 லாரிகளும் கவிழ்ந்தது. அப்போது ஓசூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கண்ணதாசன் (30), சின்னசேலத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 2 பேரும் வந்தனர். இவர்கள் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதில் பேட்டரி ஏற்றி வந்த லாரி டிரைவர் ரங்கராஜ் (35), கண்ணதாசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த பிரகாஷ் (32), மாற்று டிரைவர் மணிகண்டன் (30) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் ரங்கராஜ் (35), மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணதாசன் (30) ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் பெங்களூருவில் இருந்து ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஜோடுகுழியை சேர்ந்த டிரைவர் ரகுநாத் (35), அவருடன் வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பழ வியாபாரி வெங்கடேசன் (38) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துகள் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story