தூத்துக்குடி புதிய கலெக்டர் கே.செந்தில் ராஜ் பொறுப்பேற்பு


தூத்துக்குடி புதிய கலெக்டர் கே.செந்தில் ராஜ் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 15 Nov 2020 11:23 PM IST (Updated: 15 Nov 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் கே.செந்தில்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்தவர் சந்தீப் நந்தூரி. இவர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தேசிய சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த கே.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் 26-வது கலெக்டராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், நெல்லை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து உள்ளார். 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று உள்ளார். தொடர்ந்து வேலூரில் பயிற்சி கலெக்டராகவும், திருப்பூர், ஓசூரில் உதவி கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். சுகாதாரத்துறையில் டான்சாக், இந்திய மருத்துவ ஆணையராகவும், தேசிய சுகாதார திட்ட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

நெருக்கம்

புதிய கலெக்டர் கூறுகையில்,‘ தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இங்கு அனுபவம் வாய்ந்த குழு உள்ளது. அவர்களுக்கு மாவட்டத்தை பற்றி நன்கு தெரியும். இதனால் மாவட்ட வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நல்ல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம். நான் படித்தது நெல்லையில்தான். ஆகையால் எனக்கு இந்த மாவட்டம் மிகவும் நெருக்கமானது. இந்த பகுதி எனக்கு புதிதல்ல. ஆகையால் திட்டங்களை நிச்சயமாக சிறப்பாக செயல்படுத்த முடியும். எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறினார்.

Next Story