காயல்பட்டினத்தில் மர்மமாக இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை அடித்துக் கொன்றது அம்பலம் 4 பேர் கைது


காயல்பட்டினத்தில் மர்மமாக இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: தொழிலாளியை அடித்துக் கொன்றது அம்பலம் 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2020 11:41 PM IST (Updated: 15 Nov 2020 11:41 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் தொழிலாளி மர்மமாக இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரை சக தொழிலாளர்களே அடித்துக் கொன்றது அம்பலமானது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே துவரந்தையைச் சேர்ந்தவர் பச்சைமால் (வயது 55). இவர் ஆத்தூர் அருகே முக்காணியில் உள்ள தன்னுடைய மகள் செந்தூர் புஷ்பத்தின் வீட்டில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாகவும், மரம் வெட்டும் வேலைக்கும் சென்று வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி காயல்பட்டினம் ரத்தினபுரி பப்பரபள்ளி சுடுகாட்டு ரோட்டில் உள்ள பொது கழிப்பிடத்தின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பச்சைமாலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிப்பதற்காக திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மேற்பார்வையில், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

அடித்துக்கொலை

கட்டிட தொழிலாளியான பச்சைமால் அப்பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு செல்வது வழக்கம். கடந்த 9-ந்தேதி காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கொத்தனாரான வேல்முருகன் (32), பச்சைமாலை நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே பாரதி நகரில் நடந்த புதிய வீடு கட்டுமான பணிக்கு அழைத்து சென்றார். அந்த வீட்டிலேயே பச்சைமால் உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்தனர்.

அவர்களுடன் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மாரியப்பன் (43), தேனி மாவட்டம் கானவிளையைச் சேர்ந்த குமார் (49) ஆகியோரும் தங்கியிருந்து வேலை செய்தனர். கடந்த 12-ந்தேதி இரவில் அங்கு தங்கியிருந்த கட்டிட தொழிலாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வேல்முருகன், மாரியப்பன், குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பச்சைமாலை சரமாரியாக அடித்து உதைத்ததுடன், கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பச்சைமால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து பரப்பாடி நடுத்தெருவைச் சேர்ந்த தங்கத்துரை மகன் செல்வகுமாரின் (36) காரில் பச்சைமாலின் உடலை எடுத்துச் சென்று, காயல்பட்டினம் ரத்தினபுரி சுடுகாட்டு ரோட்டில் பொது கழிப்பிடத்தின் முன்பு வீசிச் சென்றனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதுதொடர்பாக வேல்முருகன், மாரியப்பன், குமார், செல்வகுமார் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் செல்வகுமாரின் காரையும் பறிமுதல் செய்தனர். கைதான வேல்முருகன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். 

Next Story