பட்டாசு வெடித்ததில் தகராறு: தொழிலாளி அடித்து கொலை - பெண் உள்பட 2 பேர் கைது


பட்டாசு வெடித்ததில் தகராறு: தொழிலாளி அடித்து கொலை - பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2020 9:19 AM IST (Updated: 16 Nov 2020 9:19 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில், தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம், 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தீபாவளி பண்டிகையையொட்டி தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து உள்ளார். அப்போது அவர் வெடித்த பட்டாசு, அருகில் இருந்த அக்கம்மாள் (35) என்பவரது பெட்டிக்கடை முன்பு விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனது கடையின் முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று முருகனை, அக்கம்மாள் எச்சரித்துள்ளார். இருப்பினும் அவர் அதே இடத்தில் மீண்டும் பட்டாசு வெடித்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அக்கம்மாளுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த ராஜா, சரவணன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து முருகனிடம் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கம்மாள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து முருகனை அடித்து, உதைத்து கீழே தள்ளி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அக்கம்மாள், ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அதே ஊரை சேர்ந்த சரவணன், சந்தோஷ், கோபி, வைரவேல், பூர்ணவேல் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story