கல்வராயன்மலையில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
கல்வராயன்மலையில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அருகே உள்ள கீழாத்தூர்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 30). இவருக்கும், மேல்ஆத்தூர் குழி கிராமத்தை சேர்ந்த ரேவதி(27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு புஷ்பலதா(4), யமுனா(2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இதற்கிடையில் ரேவதி மீண்டும் கர்ப்பமானார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், ரேவதியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரேவதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். நீண்ட நேரமாகியும் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன், தனது உறவினர்கள் உதவியுடன் கிராமம் முழுவதும் தேடிப்பார்த்தார்.
இந்த நிலையில் ஈஸ்வரனின் விவசாய கிணற்றின் அருகில் ரேவதியின் செருப்பு கிடந்தது. இதை பார்த்து ஈஸ்வரன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரேவதி, 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கரியாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், கிராம இளைஞர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது கிணற்றின் ஆழத்தில் ரேவதி, புஷ்பலதா, யமுனா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதையடுத்து 3 பேரது உடல்களும் மீட்கப்பட்டன. பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு 4 மாத கர்ப்பிணியான ரேவதியும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Related Tags :
Next Story