கரூர் இரட்டை வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
கரூர் இரட்டை வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் செட்டிப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அணையில் இருந்து பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு விவசாயத்திற்காக கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. அந்த வாய்க்காலில் விஸ்வநாதபுரி வாய்க்காலும் ஒன்று. இந்த விஸ்வநாதபுரி வாய்க்காலில் இருந்து இரட்டை வாய்க்கால் பிரிந்து சின்னஆண்டான்கோவில், லைட்ஹவுஸ், மார்க்கெட், ரத்தினம் சாலை உள்ளிட்ட பகுதிகளை கடந்து மீண்டும் அமராவதி ஆற்றில் கலக்கிறது. ஒரு காலத்தில் இந்த இரட்டை வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் நகர விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் இப்போது இரட்டை வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது. தற்போது வாய்க்காலின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த வாய்க்காலில் கொட்டப்படுவதால் தற்போது வாய்க்கால் தூர்ந்து போன நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கின்றன.
ரத்தினம் சாலையில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் தற்போது பெய்த மழையில் அடித்து வரப்பட்டு இரட்டை வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களை இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க விடுவது இல்லை. மேலும் கொசுத்தொல்லை அதிக அளவில் இருப்பாதல் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கரூர் இரட்டை வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story