தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா தொடங்கியது
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் கள்ளர்வெட்டு திருவிழா நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி கள்ளர்வெட்டு நடக்கிறது. கொரோனா தடை உத்தரவை தொடர்ந்து, முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் 4 நாட்களில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார்கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர் வெட்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான கள்ளர்வெட்டுத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் செயல் அலுவலர் காந்திமதி கலந்துகொண்டார். நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி காலை, மாலையில் சிறப்பு அலங்கார பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். தினசரி மாலை 6 மணிக்கு வில்லிசை நடைபெறும்.
பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதியில்லை
விழாவின் முக்கிய நாட்களான அடுத்த மாதம் (டிசம்பர்) 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் காலை, நண்பகல், இரவு நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகளும், வரும் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.மறுநாள் பக்தர்கள் ஆடு, கோழி நேமிசங்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தடை காலத்தையொட்டி 13-ந் தேதி முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. ஆனால் திருவிழா தொடர்பான அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும். கள்ளர் வெட்டு நிகழ்ச்சியும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துவருகின்றனர்.
Related Tags :
Next Story