அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள (149) அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் (150) ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ரத்னா, நேற்று வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,27,186 ஆண் வாக்காளர்களும், 1,27,370 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,54,560 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,27,621 ஆண் வாக்காளர்களும், 1,29,443 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,57,067 வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் 2,54,807 ஆண் வாக்காளர்களும், 2,56,813 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள், நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் வருகிற 21, 22, அடுத்த மாதம் 12, 13-ந் தேதி ஆகிய நான்கு தினங்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது.
எனவே, 18 வயது நிரம்பிய (1.1.2003 அன்றோ அல்லது அதற்குமுன் பிறந்தவர்கள்) தகுதியான நபர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story