பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் வேதனை: போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை


பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் வேதனை: போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 Nov 2020 5:09 AM IST (Updated: 17 Nov 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தலகாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சதாசிவம் (வயது 40). இவர், புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் விரிவு இஸ்ரவேல் நகர் அஜித்தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இளவரசி என்ற மனைவியும், ஜெய்ஆகாஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.

பணி இடமாற்றம்

கோரிமேடு போலீஸ் நிலையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த சதாசிவம், இன்ஸ்பெக்டரின் வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய கடை போலீஸ் நிலையத்துக்கு சதாசிவம் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு இந்த பணிமாறுதல் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து தன்னுடன் பணியாற்றுபவர்கள் மற்றும் தனது மனைவியிடமும் கூறி வந்துள்ளார். விருப்ப ஓய்வு பெறப் போவதாகவும் குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தலகாணிக் குப்பத்தில் உள்ள முந்திரி தோட்டத்திற்கு நேற்று காலை சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், சதாசிவத்தின் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அழைப்பு கிடைக்கவில்லை.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் அவரை தேடி, தோட்டத்திற்கு சென்றபோது அங்கு சதாசிவம், விஷம் குடித்த நிலையில் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதாசிவம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story