கொளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை
கொளத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் மக்காராம் தோட்டம் அருகே நேற்று உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்கு 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அடித்துக்கொலை
அதில் கொலையானவர், மாதவரம் பொன்னியம்மன் மேடு பிரகாஷ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்த பாலாஜி (வயது 23) என்பதும், இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
மேலும் பாலாஜி, நேற்று முன்தினம் இரவு நண்பரை பார்க்க ராஜமங்கலம் மக்காராம் தோட்டம் அருகே வந்தபோது அங்கு இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதும், இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்ததும் தெரிந்தது.
4 பேர் கைது
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24), ராஜ்கமல் (23), முருகேசன் (22), ஜார்ஜ் புஷ் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் பாலாஜியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story