மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 17 Nov 2020 5:43 AM IST (Updated: 17 Nov 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. பாபநாசம் அணைப்பகுதியில் 134 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தென்காசி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,072 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக 1,405 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 101.50 அடியாக உயர்ந்தது.

இதனுடன் இணைந்த 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 100 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,066 கன அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 82.20 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெருங்கால்வாயில் 25 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்தது. மாலை 4 மணி நேர நிலவரப்படி பாபநாசம் அணையில் 134 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 62 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

நிரம்பும் தருவாயில் கடனாநதி அணை

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 85 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 438 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 70 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் தருவாயில் உள்ளது.

ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 95.50 அடியாகவும் உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நிரம்பி வழியும் குண்டாறு அணைக்கு வருகிற தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Next Story