ஏரல் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


ஏரல் அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 Nov 2020 12:17 AM GMT (Updated: 17 Nov 2020 12:17 AM GMT)

ஏரல் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

ஏரல் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பை சேர்ந்த மக்கள் குறிப்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் சிவந்திக்கனி தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஏரல் அருகே உள்ள குறிப்பன்குளம் பஞ்சாயத்து சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் முதன்மை தொழில் விவசாயம் ஆகும். அதே போன்று கால்நடை வளர்ப்பு மற்றும் பனை தொழிலை சார்ந்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து பழனியப்பபுரம் செல்லும் ரோட்டில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க இருப்பதாக தெரிகிறது. அந்த இடத்தை சுற்றிலும் விவசாயம் நடந்து வருகிறது.

கல்குவாரிக்கு எதிர்ப்பு

இங்கு கல்குவாரி அமைக்கும்பட்சத்தில் காற்றுமாசு ஏற்பட்டு சுவாச பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஊரின் சாலைகளும் சேதம் அடையும். ஆகையால் எங்களது கிராமத்துக்கு கல்குவாரி தேவை இல்லை. எனவே அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Next Story