தொடர் மழை எதிரொலி: நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியாக விவசாயிகள் நெல் நாற்று நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் கனமழையாக பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆறுகள், கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு, குளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 1,221 குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விட்டன. இதேபோல் 2 மாவட்டங்களிலும் 1,297 மானாவாரி குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் பெரும்பாலான குளங்கள் கால் பகுதி அளவுக்கு நிரம்பி உள்ளன. பெரும்பாலான குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தி, அகலப்படுத்தப்பட்டு இருப்பதால் கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்பு உள்ளது.
நடவு பணி தீவிரம்
இதில் கால்வரத்து குளங்களின் பாசன பகுதியில் விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். நெல்லை டவுன் நயினார்குளம் பாசன பகுதியில் நேற்று விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நாற்றாங்காலில் இருந்து நாற்றுகளை பறித்து, அதனை வயலில் நடவு செய்தனர்.
இதுதவிர மானாவாரி விளை நிலங்களில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும், கிணற்று பாசன வசதி கொண்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து தங்களது வயலில் நடவு செய்வதற்கு தேவையான நெல் நாற்றுகளை தயார் செய்வதற்காக நாற்றாங்கால் அமைத்து, நாற்று பாவும் பணியை தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story