நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ஐகோர்ட்டு குழுவினர் 2-வது நாளாக ஆய்வு


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ஐகோர்ட்டு குழுவினர் 2-வது நாளாக ஆய்வு
x
தினத்தந்தி 18 Nov 2020 5:29 AM IST (Updated: 18 Nov 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் ஐகோர்ட்டு குழுவினர் நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தனர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.78.54 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. இதற்கு தரைக்கு கீழே ஒரு தளம் அமைக்கப்படுகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பல நாட்களாக மண் அள்ளி லாரிகள் மூலம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டது.

தாமிரபரணி ஆற்று நீர்வழிப்போக்கு சந்திப்பு பஸ் நிலைய பகுதியிலும் முன்காலத்தில் இருந்ததால், அங்கு ஆற்று மணல் இருந்ததாகவும், அதனை கட்டுமான நிறுவனத்தினர் எந்தவித அனுமதியும் இன்றி விற்பனை செய்து விட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி நீதிபதிகள் ஓய்வு பெற்ற புவியியல் சுரங்கத்துறை இணை இயக்குனரும், வக்கீலுமான கலைவாணன் தலைமையில் குழு அமைத்தனர்.

2-வது நாளாக ஆய்வு

அந்த குழுவினர் நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கலைவாணன் குழுவினர் ஆய்வு செய்தார். இதற்காக நவீன எந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரத்தை கொண்டு சந்திப்பு பஸ் நிலையத்தில் கட்டுமானத்துக்காக தோண்டப்படாத பகுதியில் துளையிடப்பட்டது.

இவ்வாறு கடின பாறை இருக்கும் பகுதி வரை துளையிடப்பட்டது. அப்போது ஒவ்வொரு அடி வாரியாக வெளியே வந்த மண்ணின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக கலைவாணன் விரைவில் ஐகோர்ட்டில் தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. இந்த ஆய்வின் போது வக்கீல் ஆயிரம் செல்வக்குமார், சுடலைக்கண்ணு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story