மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுமண தம்பதி பலி


மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; புதுமண தம்பதி பலி
x
தினத்தந்தி 18 Nov 2020 6:02 AM IST (Updated: 18 Nov 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதி பரிதாபமாக இறந்தனர்.

வண்டலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுசெல்லூர் கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 25), எலக்ட்ரீசியன். இவரது மனைவி நதியா (வயது 24). இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராமர் தனது மனைவியுடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ராமர் தனது மனைவி நதியாவுடன் சொந்த ஊரான காட்டு செல்லூர் கிராமத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடிவிட்டு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமர், நதியா இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமர், நதியா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story