கார் மீது சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்த ஆட்டோ டிரைவர் - புனேயில் பயங்கரம்


கார் மீது சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்த ஆட்டோ டிரைவர் - புனேயில் பயங்கரம்
x
தினத்தந்தி 19 Nov 2020 8:52 AM IST (Updated: 19 Nov 2020 8:52 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் கார் மீது சிறுநீர் கழித்ததை தட்டிகேட்ட காவலாளியை ஆட்டோ டிரைவர் பெட்ரோல் ஊற்றி எரித்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

மும்பை, 

புனே மாவட்டம் பொய்சர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சங்கர் வேபால்கர்(வயது41) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் நிறுவனத்தின் முன் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். மதியம் 1 மணியளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று சென்றது. திடீரென ஆட்டோவை நிறுத்திய டிரைவர் மகேந்திர பாலு கதம்(31) அங்கு நிறுத்தப்பட்டு இருந்த நிறுவன உரிமையாளரின் விலை உயர்ந்த கார் மீது சிறுநீர் கழித்தார்.

இதைபார்த்த காவலாளி, ஆட்டோ டிரைவரை கண்டித்தார். மேலும் வேறு இடத்தில் சிறுநீர் கழிக்குமாறு ஆட்டோ டிரைவரை துரத்திவிட்டார். இது ஆட்டோ டிரைவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மாலை 4.30 மணியளவில் ஆட்டோ டிரைவர் பெட்ரோல் பட்டிலுடன அங்கு வந்தார். அவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் காவலாளி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதில் உடலில் தீப்பிடித்து காவலாளி அலறி துடித்தார். அங்கு இருந்தவர்கள் காவலாளியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொய்சர் எம்.ஐ.டி.சி. போலீசார் ஆட்டோ டிரைவர் மகேந்திரபாலு கதமை கைது செய்தனர். கார் மீது சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட காவலாளியை, ஆட்டோ டிரைவர் பெட்ரோல் ஊற்றி எரித்த பயங்கர சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story